பெங்களூருவில் இன்று மதியம் ஏற்பட்ட திடீர் சத்தத்தை நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வைட்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. நகரின் பல பகுதிகளிலும் இந்தச் சத்தம் உணரப்பட்டதால் அச்சமைடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். ஐந்து விநாடிகள் வரை இந்தச் சத்தத்தை உணரமுடிந்ததாக பெங்களூரு மக்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனை நிலநடுக்கம் என மக்கள் கூறிவந்த நிலையில், இது நிலநடுக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் சத்தத்திற்கு விமானப்படை விமானங்கள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என பெங்களூரு நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் செல்லும் போது ஏற்படும் 'சோனிக் பூம்' எனும் நிகழ்வின் காரணமாக இந்த மிகப்பெரிய சத்தம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக போர் விமானங்கள் ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் போது, காற்றின் அதிர்வால் மிகப்பெரிய சத்தம் ஏற்படுவதே 'சோனிக் பூம்' என அழைக்கப்படுகிறது. எனவே, இதுவும் அதுமாதிரியான ஒரு நிகழ்வாகவே இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்வதற்காக பெங்களூரு போலீஸார் விமானப்படை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இருப்பினும் மிகப்பெரிய சத்தத்தைக் கேட்டு நிலநடுக்கம் என நினைத்து மக்கள் சாலைகளில் கூடியதால் பெங்களூருவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.