குலாம்நபி ஆசாத்தைத் தொடர்ந்து ஜி23 குழுவின் பிறத் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்திற்கு அழைத்து விவாதித்துள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவை என அடுத்தடுத்து தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்து வருவதையடுத்து, அமைப்பு ரீதியாக கட்சியில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், கபில்சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள், சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனால் அவர்களுடன் கட்சித் தலைமை அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடத்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும், காங்கிரஸ் கட்சித் தோல்வியைச் சந்தித்ததால், கடந்த மார்ச் 16- ஆம் தேதி அன்று ஜி23 குழுத் தலைவர்கள் ஒன்றுக்கூடி கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக விவாதம் நடத்தினர்.
அப்போது அனைவரையும் உள்ளடக்கிய தலைமையின் கீழ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும், அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கக் கூட்டுத் தலைமை அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், அண்மையில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஜி23 தலைவர்களின் நிலைப்பாட்டை விவரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஜி23 குழுவைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி ஆகியோரை சோனியா காந்தி சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. வரும் நாட்களில் ஜி23 குழுவைச் சேர்ந்த பிற மூத்த தலைவர்களையும் சந்திக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.