இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடியினரான குகி இன மக்கள் கடுமையான எதிர்ப்புகளை எழுப்பி வருகின்றனர்.
இதனால் இந்த இரு சமூக மக்களிடையே மே மாதத் தொடக்கத்தில் கலவரம் மூண்டு அப்போதிருந்து போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் அண்மையில் 10 எதிர்க்கட்சிகள் சார்பில் கடிதமும் எழுதப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்று களநிலவரத்தை ஆய்வு செய்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காணொலி வெளியிட்டுள்ளார். அதில், “மணிப்பூர் பல்வேறு மதங்கள், இனங்களை அரவணைக்கும் மாநிலமாக உள்ளது. மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க மிகப்பெரிய நம்பிக்கை தேவை. ஆனால், வெறுப்பையும் பிரிவினையையும் ஏற்படுத்த சிறு தவறான நடவடிக்கை போதுமானது. முன்பு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த மணிப்பூர் மக்கள் இன்று ஒருவருக்கொருவர் எதிராக இருப்பது இதயத்தை உலுக்குகிறது. மக்கள் இதுவரை தான் சம்பாதித்த, வாழ்ந்த வீடுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறுவது வேதனை அளிக்கும் ஒன்றாகும்.
மக்கள் வாழ்வை அழிக்கும் இந்த வன்முறை நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சனையை ஆற்றுப்படுத்துவதற்கு வழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதுவே குழந்தைகளுக்கான எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும். மணிப்பூர் மண்ணில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என மாநில மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எதிர்வரும் நாட்களில் மக்கள் பிரச்சனைகளில் இருந்து வலுவுடன் வெளியே வருவார்கள். தற்போதைய பிரச்சனைக்கு மணிப்பூர் மக்கள் ஒன்றுபட்டு தீர்வு காண்பார்கள் என்பது என் நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.