கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டப்பேரவை நேற்று கூட்டப்பட்டது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரளாவில் பேரிடர் பணிகளில், நிவாரண பணிகளில் உதவியர்களுக்கும் அக்கூட்டத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார் பினராயி விஜயன்.
அதை தொடர்ந்து பேசிய அவர் தற்போது கேரளாவில் வெள்ள சேதத்தை சரிசெய்ய இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தற்போது சுமார் 305 நிவாரண முகாம்களில் 59 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு நேற்று, அதாவது வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்பபடி கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை 1026 கோடி குவிந்துள்ளது. இதுவரை பொதுமக்கள் மட்டும் 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும் வங்கி மூலமாகவும் பணம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.