டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை ஹவாலா பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை 30ம் தேதி நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை ஜூன் 9ம் தேதி வரை அவரை காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், "சத்யேந்திர ஜெயின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அதனை நானே நேரில் கண்டறிந்துள்ளேன். நாங்கள் தேச பக்தர்கள். எங்கள் தலை துண்டிக்கப்பட்டால் கூட ஒருபோதும் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"16 கோடி ரூபாய் அவர் முறைகேடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஏன் ஆதரிக்கிறார். குற்றவாளிகளுக்கு ஒரு போதும் துணை போகாதீர்கள், அது உங்களுக்கு நல்லதல்ல" என்று ஸ்மிரிதி இராணி முதல்வர் கெஜ்ரிவாலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.