மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மொத்தமுள்ள 60 இடங்களில் 21 இடங்களை வென்ற பா.ஜ.க., சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதனையடுத்து, சமீபத்தில், மூன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். அதேபோல தேசிய மக்கள் கட்சி, சுயேச்சை எம்.எல்.ஏ., திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகிய ஆறு பேர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஆதரவு அளித்ததால் பா.ஜ.க. பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த வாக்கெடுப்பில் எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி சட்டப்பேரவை கூட்டத்தைப் புறக்கணித்தனர். அவர்களில் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் பதவி விலகிய 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைவதற்காக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் டெல்லி சென்றுள்ளனர்.