கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும், டி.ஆர்.பாலு எம்.பி, திருமாவளவன் எம்.பி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு பதவியேற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.