கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் அளித்த புகாரின் பேரில், சித்தராமையா மீது மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இப்படியாக கடுமையான சிக்கலில் இருக்கும் சித்தராமையா, அடுத்து ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தியாவின் தேசிய தந்தையான மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு அரசியல் தலைவர்கள், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதில், கர்நாடகா மாநிலம், பெங்களூர் காந்தி மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா மரியாதை செலுத்த வந்தார்.
முதல்வர் சித்தராமையா, காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு முன்பு, அங்கிருந்த கையில் தேசிய கொடியுடன் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், சித்தாராமையா போட்டிருந்த காலணியை அகற்ற உதவினார். அதன் பிறகு, அருகில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர், காங்கிரஸ் தொண்டர் வைத்திருந்த தேசிய கொடியை வாங்கினார். காங்கிரஸ் தொண்டர் ஒருவர், தேசிய கொடியை கையில் வைத்துக்கொண்டு சித்தராமையாவின் காலணியை அகற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ.கவினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.