வங்காள தேச நாட்டில் ஷேக் ஆளும் அவாமி லீக் ஆட்சி ந கட்சியின் எம்.பியாக பொறுப்பு வகித்து வந்தவர் அன்வருல் அசிம். இவர், கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைகாகக் கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். இதனையடுத்து, அடுத்த நாள் வெளியே சென்ற அன்வருல் அசிமி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அசிமின் நண்பர், அவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அழைத்த போது எந்தவித பதிலும் வரவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வங்காளதேச தூதரகம் போலீசில் புகார் அளித்திருந்தது. அதன்படி, வங்காள தேச எம்.பி அன்வருல் அசிம்மை கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி வந்தனர். இந்த நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசிம் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறுகையில், ‘இதுவரை, சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்ட கொலை. இதுவரை வங்கதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்தியர் எவருக்கும் தொடர்பு இல்லாததால், இந்தியாவுடனான உறவில் மோசமடையும் வகையில் எதுவும் இங்கு நடக்கவில்லை’ என்றார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க போலீசாருடன், வங்காளதேஷ் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி. அகிலேஷ் சதுர்வேதி கூறுகையில், ‘இது திட்டமிடப்பட்ட கொலை. பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் அக்தருஸ்ஸாமான், அன்வருல் அசிமை கொலை செய்வதற்காக அவர் ரூ.5 கோடி கொடுத்திருக்கிறார். கொலையாளிகள், அசிம்மின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை துண்டுத்துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்து பல இடங்களில் வீசி எறிந்திருக்கலாம்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அசிமுடன் ஒரு பெண் உட்பட அடையாளம் தெரியாத 2 ஆண்கள் என மூன்று பேர் வருவதைக் காட்டுகிறது. அடுத்த சில நாட்களில் அவருடன் வந்தவர்கள் வெவ்வேறு தேதிகளில் வளாகத்தை விட்டு வெளியேறுவதைக் கண்டாலும் அசிம் வெளியே வரவே இல்லை. அசிம், சி.சி.டி.வி காட்சியில் தோன்றிய அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் குடியிருப்புக்கு சென்ற உடனேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் கொலையைச் செய்த ஒருவரான ஹவ்ல்தாரையும், கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.