சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷீரடியில் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு கோயில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோயில் உள்ள ஷீரடியே சாய்பாபாவின் பிறந்த இடமாக பரவலாக கருதப்படுகிறது. உலக புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரியில் இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.
அவரின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஷீரடி சன்ஸ்தான் அறக்கட்டளை ஷீரடி முழுவதும் நாளை முழுவதும் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் கோயில் தொடர்ந்து இயங்கும் எனவும், பக்தர்கள் கடையடைப்பினால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகிய வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.