2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதாவை சிவசேனா கட்சி, தனது சாம்னா இதழில் கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது. நேற்று காலை வெளியான சாம்னா இதழில், கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த மசோதா என குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை விமர்சித்திருந்தது. இதனையடுத்து மக்களவையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக சிவசேனா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்தது.
இந்த திடீர் பல்டி சிவசேனா தொண்டர்களையே குழப்பமடைய வைத்துள்ளது எனலாம்.இது குறித்து விளக்கம் அளித்த சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த், "நாட்டு நலன் கருதியே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மராட்டியத்துக்கு மட்டுமே பொருந்தும்” என்றார். மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் சிவசேனா கைழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஒப்பந்தத்திலேயே மத்தியிலும் மாநிலத்தில் வெவ்வேறு காரணிகளை கொண்டு தனித்த முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.