இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனக் கூறும் மத்திய அரசு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பெகாசஸ் உளவு மென்பொருளை விற்பனை செய்யும் என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனத்துடன் மத்திய அரசு வர்த்தகத்தில் ஈடுபட்டதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனத்துடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியச் சீன எல்லை பிரச்சனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், 2021-ல் இந்தியா-சீன எல்லையில் எந்த ஊடுருவலும் பதிவாகவில்லை எனக் கூறியுள்ளது.
மேலும், மியான்மர் அகதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், "மியான்மரில் இராணுவ புரட்சி ஏற்பட்ட பின்னர், 8486 மியான்மர் குடிமக்கள்/அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களில் 5796 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். 2690 பேர் இன்னும் இந்தியாவில் உள்ளனர். ஊடுருவும்போது எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், சம்மந்தப்பட்ட மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளது.