சந்திராயன்-3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திராயன்-3 என்ற விண்கலத்தை செலுத்துவதற்கான சோதனை முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை நடத்தப்பட்டது. இதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டமாக வர்ணிக்கப்படும் சந்திராயன்-3 திட்டத்திற்கான தொழில்நுட்ப பணிகள் கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ வளாகத்தில் உள்ள உயர்தர சோதனை மையத்தில் 25 வினாடிகளில் கிரியோஜெனிக் என்ஜின் வெப்ப சோதனை நடைபெற்றது. இது ஒரு முக்கியமான சோதனை என்ற அளவில் சந்திராயன் விண்கலத்தில் உள்ள ரோவர் அமைப்பினுடைய ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை தற்போது முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் இறுதியில் சந்திராயன்-3 விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.