டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது நேற்று (16-05-24) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவாலிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி டெல்லி போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பதாவது, “அரவிந்த் கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் உள்ளே வந்தார். திடீரென்று, அவர் எந்த தூண்டுதலும் இல்லாமல் என்னைத் தாக்க ஆரம்பித்தார். மேலும், என்னை துஷ்பிரயோகம் செய்தார். நான் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும் போது அவர் என்னை 7 முதல் 8 முறை அறைந்தார். நான் மீண்டும் மீண்டும் உதவிக்காக கத்திக் கொண்டிருந்தேன் ஆனால் யாரும் வரவில்லை. அவர் என் மீது பாய்ந்தார். மிருகத்தனமாக இழுத்து, வேண்டுமென்றே என் சட்டையை மேலே இழுத்தார். அவர் என் மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உதைத்தார். எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது என்று சொன்னேன், ஆனால் அவர் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் முழு பலத்துடன் என்னைத் தாக்கினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஸ்வாதி மாலிவாலை உதவியாளர் பிபவ் குமார் தாக்குவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் இந்த அரசியல் அடியாட்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.
எந்தச் சூழலும் இல்லாமல் தனது மக்களை ட்வீட் செய்வதன் மூலமும் வீடியோக்களை இயக்குவதன் மூலமும், இந்தக் குற்றத்தைச் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார். ஒருவரை அடிப்பதை வீடியோ எடுப்பது யார்? வீடு மற்றும் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மை அனைவருக்கும் தெரியவரும். உன்னால் எந்த நிலைக்கு விழ முடியுமோ, அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் எல்லோருடைய உண்மையும் உலகத்தின் முன் வெளிவரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.