உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புனித நீரான கங்கை நதியில் ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் நிகழும் மகா பெளர்ணமி தின நாளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் ஏராளமானோர், மகா பெளர்ணமியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று (24-02-24) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தடுக்கும் முயற்சியில் டிராக்டர் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார். ஆனால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். கங்கை நதியில் புனித நீராடச் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.