விகாஸ் தூபே வழக்கை உத்தரப்பிரதேச அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், கான்பூர் சிறப்புப் படை டி.ஐ.ஜி, சபேபூர் காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர்கள் உள்ளிட்ட 68 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே என்ற ரவுடியைக் கடந்த வாரம் போலீஸார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு போலீஸார் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விகாஸ் தூபேவைப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரைப் பற்றிய தகவல் கொடுப்போருக்குச் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தின் மவுதாஹா கிராமத்தில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் விகாஸ் தூபேவின் உதவியாளர் அமர் தூபே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிரேம் பிரகாஷ் பண்டே, அதுல் தூபே ஆகிய இரு ரவுடிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சபேபூர் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அனைத்து சப-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் தலைமை கான்ஸ்டபிள்கள் என அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்துச் சிறப்புப் படை டி.ஐ.ஜி அனந்த் தேவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விகாஸ் தூபேவைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.2.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.