டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்கள் இடையே நடைபெற்ற இச்சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (19/07/2021) தொடங்க உள்ள நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அண்மையில் சரத் பவாரைச் சந்தித்ததுடன், அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்திருந்தார்.
இதையடுத்து, வரும் குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையே, சரத் பவார் மகாராஷ்டிரா அரசை ரிமோட் கண்ட்ரோல் போல் இயக்குவதாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் விமர்சித்திருந்தார். இத்தகைய பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி உடனான இச்சந்திப்பு பல்வேறு வியூகங்களை வித்திட்டுள்ளது.