கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாளை (மே 28-ம் தேதி) சவார்க்கர் பிறந்தநாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனத்திடம் பிரதமர் மோடி ஆசி பெற்றதோடு செங்கோலையும் பெற்றுக் கொண்டார். மத்திய கலாச்சார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதீனங்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, ''உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனக்கு அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசிர்வாதத்தால் சிவபக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. புனித செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவியை வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் செங்கோல் ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக்காக வைக்கப்பட்டிருந்தது. எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது'' என்றார்.