இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக தடுப்பூசிகள் மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்படும். இந்த மூன்றுகட்ட சோதனை தரவுகளை வைத்தே தடுப்பூசிகளுக்கு அரசாங்கங்கள் அனுமதி வழங்கும். ஆனால், மூன்றாவது கட்ட சோதனையின் தரவுகள் இன்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி வழங்கப்பட்டது.
இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் கோவாக்சினின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இன்று இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு ஆய்வு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் நிபுணர் குழுவின் ஆய்வில் கோவக்சினின் செயல்திறன் 77.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 25,800 பேரை வைத்துச் செய்யப்பட்ட மூன்றாவது கட்ட சோதனையின் தரவுகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.