இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் விரட்டி விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் பிரித்வி ஷா. 23 வயதான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, ஏப்ரலில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பிரித்வி ஷா கடந்த புதன்கிழமையன்று மும்பை ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள ஹோட்டலுக்கு தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, பிரித்வி ஷாவிற்கு அருகில் வந்த ஒரு ஜோடி தாங்கள் உங்களுடைய ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த பிரித்வி ஷா, “ச்ச.. ச்ச.. என்னோட ரசிகருன்னு வேற சொல்றிங்க.. ஒரு போட்டோ தான.. எடுத்துக்கோங்க..” என்பது போல் கூறியுள்ளார்.
இதை கப்பென்று பிடித்துக் கொண்ட அந்த ஜோடி, சில போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். ஆனால், பிரித்வி ஷாவை விடாத அந்த ஜோடி, தொடர்ந்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த பிரித்வி ஷா, தன்னுடைய மேனேஜரை அழைத்து அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டல் நிர்வாகம், அந்த ஜோடியை ஹோட்டலை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.
அதன் பிறகு, ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த அந்த ஜோடி, தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் சாலையில் வைத்து பிரித்வி ஷாவின் காரை மடக்கிய அந்த கும்பல், பேஸ்பால் மட்டைகளால் அவரையும், அவரது காரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, காவல்நிலையத்தில் பிரித்வி ஷா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சப்னா கில் என்கிற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பில், பிரித்வி ஷா தான் தன்னை முதலில் தாக்கினார் என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.