ஊரடங்கு காலத்தில் ஏழைமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் போது அதனைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ராஜஸ்தானில் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசின் பரவலைக் கட்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தினக்கூலிகள் மற்றும் ஏழை மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அப்படிக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஒருசிலர், தேவையான பொருள் அல்லது உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இப்படி உதவி செய்வோரில் சிலர், தங்கள் உதவி செய்வதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வந்தனர். இம்மாதிரியான பதிவுகள் உதவி பெற்றவரின் மனதைக் காயப்படுத்தும் வகையில் அமைவதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஏழைமக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் போது அதனைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு ராஜஸ்தானில் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், "ஊரடங்கில் அவதியுறுபவர்களில் பலரும் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக அரசு மற்றும் சக பொதுமக்களையே நம்பியுள்ளனர். ஆனால், இதனை ஒரு காரணமாக வைத்து, அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களை அரசு இலவசமாக அளிப்பதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கூடாது. அதேபோல பொதுமக்கள் மற்றும் சமூக சேவை மையங்களும் புகைப்படம், வீடியோ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.