நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.
அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வண்ண புகை குப்பிகளை வீசியதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரியது. மேலும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்பது நன்கு திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் வாதத்தை முன் வைத்தனர்.
இதனையடுத்து 4 பேருக்கும் 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “நாங்கள் 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி கோரியிருந்தோம். இதனை நீதிமன்றம் பரிசீலித்து, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.