தக்காளி காய்ச்சல் சமீப காலங்களில் அதிக அளவில் பரவுவதால் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
தக்காளி காய்ச்சல் நோய் முதன் முதலாக கேரளா கொல்லம் மாவட்டத்தில் மே மாதம் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜூலை 26 வரை 82 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து குழந்தைகளும் 5 வயதிற்கு கீழானவர்கள். இந்த பரவும் தன்மை கொண்ட நோயால் மேலும் 26 குழந்தைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளா மாநிலத்தில் அதிக அளவில் பரவியதால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே இந்திய அரசு கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை போன்ற நோய்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் புதிதாக தக்காளி காய்ச்சல் நோய் குழந்தைகளுக்கு பரவுவதால் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. தக்காளி காய்ச்சல் பரவும் தன்மை கொண்டது என்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமை படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி உணவு ஆகாரங்கள் கொடுக்கலாம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோய் 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அதிக அளவில் தாக்கலாம். காய்ச்சல், அரிப்பு, உடலில் அங்கங்கு தடிப்புகள், வாந்தி, வயிற்றுப்போக்கு , சோர்வு, உடல் வலி போன்றவை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.