இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான உப்பு பாக்கெட்டுகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. அதாவது நாம் உணவுக்கு உப்பிடும்போது, நம்மையறியமாலே நுண்பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்துத்தான் சாப்பிடுகிறோம்.
மும்பை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உப்பு ஆய்வில் இறங்கி மேற்கண்ட தகவலை உறுதிசெய்துள்ளனர். இந்தியாவின் பிரபலமான பிராண்டட் உப்புகளிலும் இவை காணப்படுகின்றன என அவர்கள் கூறுகின்றனர். எனினும் எந்தெந்த ப்ராண்ட் உப்புகளில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் காணப்படுகின்றன என இந்த ஆய்வு வெளிப்படுத்தவில்லை.
கடல் மாசுபடுவதன் விளைவே, உப்பில் காணப்படும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் எனக் கூறுகிறது இந்த ஆய்வு. உலக அளவில் உப்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நுண்பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்கெனவே நமது உணவுச்சங்கிலியில் இடம்பிடித்துவிட்டதை சர்வதேச ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மீன், நண்டு போன்ற கடலுணவின் வழியாக நுழைந்தது, இப்போது உப்பின் வழியாகவும் நம் குடலைச் சென்றடைய ஆரம்பித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ உப்பில் 0.063 மில்லிகிராம் பிளாஸ்டிக் நுண்துகள் வரை காணப்படுகிறதாம்.
நேரடியாக கப்பல்களிலிருந்து கடலுக்குள் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைவிட, ஆறுகள், முகத்துவாரங்கள் வழியாக கடலைச் சென்றடையும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் அதிகம். நாளடைவில் இவை சிதைந்து நுண் பிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. இத்தகைய கடல்நீரிலிருந்து உப்பு தயாரிக்கும்போது, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் எப்படி இல்லாமல் போகும்?
கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதைத் தடுக்காதவரை, உப்பிலும், கடல் உணவிலும் கலக்கும் பிளாஸ்டிக் நுண்நுகளைத் தடுக்கமுடியாதாம். என்ன ஒரு ஆறுதலென்றால், நம் நாட்டு உப்பில் மட்டுமல்லாமல் உலகமெங்குமே உப்பில் இந்த நுண்துகள்கள் காணப்படுகிறதாம்.
கரையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், கடலில் சென்றுசேரும் பிளாஸ்டிக்கின் அளவு குறைந்து சுத்தமான உப்பு நமக்குக் கிடைக்கும்.