Skip to main content

மட்டமான கழிப்பறை… மோசமான சாப்பாடு… கொதித்த கரோனா மருத்துவர்கள்! குறைதீர்த்த உ.பி. அரசு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தமிழகத்தில் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இறந்தால் அவர்களுக்கான இறுதிக் காரியங்கள் நடத்தக்கூட வழியில்லாதபடி எதிர்ப்பு எழுகிறது. அவர்களுக்கு உரிய இறுதி மரியாதைச் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென என பிரச்சனையெழுந்தது. இதையடுத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெறும். இதற்கு இடையூறு செய்பவர்கள் கைதுசெய்து சிறையிலடைக்கப்படுவர் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
 

 

உத்தரபிரதேசத்திலும் கரோனா மருத்துவர்கள் விஷயத்தில் வேறுவிதத்தில் சர்ச்சையெழுந்திருக்கிறது. உ.பி. மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் தற்சமயம் 43 கரோனா தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். இப்பகுதியில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, மருத்துவர்கள் தங்குவதற்கு அரசு பள்ளியொன்று கெஸ்ட் ஹவுசாக ஒதுக்கப்பட்டது.
 

 

அந்தப் பள்ளியில் மருத்துவர்களுக்குப் போதிய வசதி இல்லாததையடுத்து அங்கு நிலவும் சூழலை மருத்துவர்கள் மூன்று வீடியோக்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

up


 

http://onelink.to/nknapp


அந்த மூன்று வீடியோக்களில் ஒன்றில், “இப்ப அதிகாலை 3 மணி. இங்க கரெண்ட் இல்லை. ஒரே ரூம்ல நான்கு படுக்கைப் போட்டிருக்காங்க. இந்த அறையில மின்விசிறிகூட வேலைசெய்யலை. இங்க இருக்கிற பாத்ரூமைக் காட்டுறேன் பாருங்க. சிறுநீர் அறையில குழாயே இல்லை. கழிப்பறை அடைச்சுக்கிட்டு இருக்கு” என ஒருவர் நிலவரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.
 

up


இரண்டாவது வீடியோவில் கரோனா பாதுகாப்பு உடையிலிருக்கும் மருத்துவர் ஒருவர், “ஒரு பள்ளியோட பெரிய வகுப்பறையில படுக்கை வசதி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு ரூம்லயும் நாலு படுக்கைங்க. ஒருத்தர்கிட்ட கரோனா தொற்று இருந்தா மற்றவங்களுக்கு பரவக்கூடாதுனுதான் குவாரண்டைன் பண்றாங்க. பாத்ரூம் பற்றி புகார் கொடுத்ததும் நடமாடும் கழிவறையைக் கொண்டுவந்து வெச்சாங்க. இன்னும் இங்க மின்சாரம் வரலை. 20 லிட்டர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து நாலுபேரும் ஷேர் பண்ணிக்கோங்கனு சொல்றாங்க” என்கிறார்.

 

up


மூன்றாவது வீடியோவில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தரமில்லாத உணவைக் காட்டுகிறார்கள். “பாலிதீன் காகிதத்தில் பூரியும் சப்ஜியும் ஒன்றாகக் கலந்து இருப்பதைத் தருகிறார்கள். இதுதான் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தரப்படுகிறது” என்கிறது முகம் காட்டாத ஒரு குரல்.
 

இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் பரவி வைரலானதும் உ.பி. தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.கே. ஷர்மா அந்தப் பள்ளியைப் பார்வையிட்டுவிட்டு மருத்துவர்களை வேறொரு கெஸ்ட் ஹவுஸ்க்கு மாற்ற உத்தரவிட்டார். அத்தோடு மருத்துவர்களுக்கு நல்ல உணவும் கிடைக்கும்படி ஒரு சமையலறையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
 

இதை முதலிலே செய்திருந்தால், இந்தக் கெட்ட பெயரைத் தவிர்த்திருக்கலாமே!
 

- க.சுப்பிரமணியன்


 

சார்ந்த செய்திகள்