காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரவுன் பல்கலைக்கழக அரசியல் நிபுணர் பேராசிரியர் அசுதோஷ் வர்ஷ்னி, அப்பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். காணொளி வாயிலாக நடந்த இந்த உரையாடலின்போது, சதாம் ஹுசைன் மற்றும் கடாபி ஆகியோருடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளில், இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாகவும், இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பதிலளித்த ராகுல் காந்தி, "சதாம் ஹுசைன் மற்றும் கடாபி ஆகியோர் தேர்தல்களை நடத்தினர். அவர்கள் அதில் வென்றார்கள். அவர்கள் வாக்களிக்கப்படவில்லை என்பது இல்லை. ஆனால் அந்த வாக்குகளைப் பாதுகாக்க நிறுவன கட்டமைப்பு இல்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "தேர்தல் என்பது வெறுமனே மக்கள் சென்று, வாக்களிக்கும் இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துவது அல்ல. ஒரு தேர்தல் என்பது விவரிப்பு பற்றியது; ஒரு தேர்தல் என்பது நாட்டின் கட்டமைப்பு சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் அமைப்புகளைப் பற்றியது; ஒரு தேர்தல் என்பது நீதித்துறை நியாயமாக இருப்பது பற்றியது; பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதைப் பற்றியது. வாக்குகள் பயன்பட அவ்விஷயங்கள் தேவை" எனக் கூறினார்.
மேலும் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்ப்பதிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், “நான் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்ளாதபோது, என்னை நீங்கள் ஒதுங்கிப்போகச் சொல்லியிருந்தால், என்னால் அது முடியும் என இருந்திருப்பேன். ஆனால் நான் நம்பும் கருத்துகளின் மீது தாக்குதல் நடத்த ஒரு அரக்கன் வருவதாக நீங்கள் சொன்னால், இல்லை நான் பின்வாங்க மாட்டேன் என்று கூறுவேன்" என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இந்த உரையாடலின்போது, காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வரும் ஜி-23 தலைவர்களைப் பற்றியும் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஜனநாயக தன்மையுடையது என கூறிய ராகுல், ஜி-23 தலைவர்களைக் குறிப்பிட்டு, “அவர்கள் பாஜக, திரிணாமூல் உள்ளிட்ட வேறு கட்சிகளில் இருப்பார்களா? வேறு கட்சியிலும் இருக்க மாட்டார்கள். காங்கிரஸை பொறுத்தவரை நாங்கள் உங்கள் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் விவாதங்கள் தொடர வேண்டும் என கூறுவோம்” என்று கூறினார்.