உச்சநீதிமன்றம் பல முக்கிய வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்பளித்து வரும் நிலையில் இன்றும் நான்கு முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தது.
அப்போது பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், "பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு பல கோயில்களிலும், மசூதிகளிலும் கூட இந்த நடைமுறை உள்ளது. ஆனால் அனைத்து மதத்தினருக்கும் அவரவர் நம்பிக்கைகளை பின்பற்ற உரிமை உண்டு. ஆகவே சபரிமலை வழக்கில் மத நம்பிக்கையை கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்" என தெரிவித்தார்.