2019 மக்களவை தேர்தலின்போது மதுரையில் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும் இன்றுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளானது.
இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தின்போதும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாதது கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்தநிலையில் பீகார் மாநிலத்திலும் இதேபோன்றொரு விவகாரம் கிளம்பியுள்ளது.
பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் ஒப்புதல் வழங்கி ஒருவருடம் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. இதனைக் கண்டிக்கும் விதமாக மிதிலா மாணவர் அமைப்பு, செப்டம்பர் 8ஆம் தேதி எய்ம்ஸ் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாள அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக வீடுகளிலிருந்து செங்கல் சேகரிக்கும் பணியை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.