இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது.
இன்று (26/06/2020) காலை நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105-லிருந்து 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894- லிருந்து 15,301 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,697- லிருந்து 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,89,463 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ரத்து மேலும் நீக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.