Skip to main content

“இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும்” - ராகுல் காந்தி

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
Reservation should be increased to more than 50 percent says Rahul Gandhi

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமவாய்ப்புகளுடன் போட்டியிட்ட தேர்தல் அல்ல. அந்த தேர்தலை நேர்மையான தேர்தலாகவோ, சுதந்திரமான தேர்தலாகவோ நான் கருதவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. நேர்மையான தேர்தலாக இருந்தால், பாஜக 240 தொகுதிகளுக்குப் பக்கத்தில் கூட வந்திருக்காது” என்று பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்  என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “சாதி என்பது இந்தியாவில் ஒரு அடிப்படைப் பிரச்சினை. இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அநீதிகளில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்களை வகுக்க முடியும்.

சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்ட பிறகு அதைச் சரிசெய்வதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அதில் ஒன்றுதான் இட ஒதுக்கீடு. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று என்னைப் பற்றி யாரோ தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். நான் ஒருபோதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்