இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலை இந்திய கப்பற்படை அதிகாரிகள் விரட்டியடித்தனர்.
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஆலம் கீர், நேற்று குஜராத் கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது. திடீரென பாகிஸ்தான் போர்க்கப்பல் இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியடைந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம், இந்திய எல்லையை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும், இந்திய எல்லைக்குள் நுழைந்த காரணத்தை அறிய வானொலி மூலம் தொடர்புகொள்ள முயன்ற நிலையில், அவர்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, டோர்னியர் விமானம் ஆலம்கிர் மீது வட்டமிட்டு எச்சரித்துக்கொண்டே இருந்தது. இதையடுத்து, பின்வாங்கிய ஆலம் கீர் பாகிஸ்தான் பகுதிக்குத் திரும்பிச் சென்றது.