கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மது என்பவர் 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து பசிக்காக உணவு திருடியதாகக் கூறி அவரின் கை கால்களைக் கட்டி தரையில் இழுத்துச் சென்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய பழங்குடி ஆணையம் கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தனர். மேலும், மதுவின் உடலில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் அவர் உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொலை வழக்கில் சாட்சிகளை திசைதிருப்பி முக்கியக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதன் பின்னணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் மதுவின் சகோதரி சரசு நீதிமன்றத்தில் கண்ணீருடன் கூறியிருந்தார். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு நெருக்கமானவர்கள் அடிக்கடி வந்து வழக்கில் இருந்து பின்வாங்க பேரம் பேசுவதாகவும், அதற்கு உடன்படாததால் தங்களை தொடா்ந்து மிரட்டி வருவதாகவும் மதுவின் தாயார் மல்லி பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முன்மயி ஜோஷியிடம் புகார் கொடுத்திருந்தார். மேலும், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் மதுவின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறிவந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பினை வழங்க இருப்பதாக நீதிமன்றம் கூறிவந்த நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதி வழங்குவதாக அறிவித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளாக 16 பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேர் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.