ஹவுராவில் இருந்து மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12810) ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று (30.07.2024) அதிகாலை 03.45 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இருந்து 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் சிக்கி 6 பயணிகள் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து சம்பவம் ரயில் பயணிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான உதவிக்கு இந்திய ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விபத்தில் திடீர் திருப்பமாக முதலில் இவ்வழித்டத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில் மீது ஹவுரா - மும்பை பயணிகள் விரைவு ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ள நிலையில் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தென்கிழக்கு ரயில்வே மேலாளர் ரெஹான் கூறுகையில், “அதிகாலை 3.39 மணியளவில், ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர். ஏற்கனவே ஹவுரா மற்றும் ஹவுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது விபத்து ஏற்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்திற்குள்ளானது. மேலும் இது தொடர்பாக செரைகேலா கர்சவான் போலீஸ் எஸ்.பி. முகேஷ் லுனாயத் கூறுகையில், “அதிகாலை 4:02 மணியளவில், பயணிகள் ரயில் தடம் புரண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 300 போலீசார் இங்கு உள்ளனர். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இதனால் நாங்கள் மறுசீரமைப்பு பணியை நோக்கி நகர்கிறோம்” எனத் தெரிவித்தார்.