நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே-23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இ.வி.எம் மின்னணு (EVMs) வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து வாகனம் மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் படியான ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சந்தவ்லி நாடாளுமன்றத் தொகுதியில், ஓர் வாகனத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டு, அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் வைக்கப்படும் படியான வீடியோ காட்சி ஒன்று வெளியானது.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள், ‘எதற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இப்போது இறக்கி வைக்கப்படுகின்றன' என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு, சந்தவ்லி தொகுதிக்கு உட்பட்ட 35 ரிசர்வ் இ.வி.எம் இயந்திரங்கள் தான் இறக்கி வைக்கப்பட்டன. இயந்திரங்களை வைப்பதில் சிக்கல் இருந்ததால், அது இப்போது சரி செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, ரிசர்வ் இ.வி.எம் இயந்திரங்களும் மற்ற இயந்திரங்கள் வைக்கப்படும் போது தான் வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும் காசியாபூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அஃப்சல் அன்சாரி, வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றுவதற்கான வேலை நடக்கிறது என்று சொல்லி தர்ணாவில் ஈடுபட்டார். போலீஸாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.