ஏ.டி.எம். இயந்திரத்தைத் தொடாமலே செயலியைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் புதிய முறையை விரைவில் வங்கிகள் செயல்படுத்த உள்ளன.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் சூழலில், ஏ.டி.எம். இயந்திரத்தில் பணமெடுப்பது மூலமும் கரோனா பரவலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில், மக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்துள்ளது ஏ.ஜி.எஸ். டிரான்சாக்ட் என்ற நிறுவனம். இந்தப் புதிய தொழில்நுட்பத்தின்படி, வழக்கமாக கார்டு மற்றும் பின் நம்பரைப் பயன்படுத்தி பணம் எடுக்காமல் அதற்குப் பதிலாக வங்கியின் செயலியைப் பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் வங்கியின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று திரையில் காட்டும் QR கோடினை, அந்தச் செயலி மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தவுடன் நமது வங்கிக் கணக்கு தகவல்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் தோன்றும், பின்னர், நமக்குத் தேவையான தொகையை மொபைலில் டைப் செய்தால், அந்தத் தொகையை ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். நாம் செயலியில் பதிவிடும் தொகை ஏ.டி.எம். திரையிலும் தெரியும் என்பதால், பணம் எடுப்பதற்கு முன்னர் சரிபார்த்துக்கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.