Skip to main content

பீகாரில் பிரமாண்ட எதிர்க்கட்சி கூட்டம்; உறுதி செய்த முதல்வர் 

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Chief Minister Stalin attends a meeting of opposition parties in Bihar

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசி வருகிறார்.

 

இது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் ஜூன் 12 ஆம் தேதி பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த கூட்டமானது வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் லலன் சிங் தெரிவிக்கையில், "வரும் 23 ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில் பீகாரில் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார். இன்று டெல்டா மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள அவர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கூட்டத்தில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களில் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொள்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்