மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அந்த வகையில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பேசுகையில், “மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களை கொல்லும் அரசாக மாறிவிட்டது. 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார். மணிப்பூர் மகளிர் ஆணையமும், தேசிய மகளிர் ஆணையமும் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே உள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியுமா?. நாடாளுமன்றத்தில் சொங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையிலிருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா?. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது”என பேசினார்.