நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக அவையில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (06.12.2024) போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நாடாளுமன்ற வளாகத்தில் அரசமைப்பு புத்தகத்தை ஏந்தி சென்றனர். அப்போது அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாகக் கூறினார்.
மேலும் ராகுல் காந்தியை உச்சக்கட்ட துரோகி என்று பா.ஜ.க. எம்பி சம்பித் பத்ரா கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா, “ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை துரோகி என்று சொல்லக்கூடியவர்கள், ராகுல் காந்திக்கும் அப்படிச் சொல்லியுள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற எனது சகோதரனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக, அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்களுக்குத் தைரியம் இல்லை” எனத் தெரிவித்தார்.