கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடதுசாரி மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் அறிவித்தார்.
இந்நிலையில் தடைகளை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பெங்களூரு டவுன் ஹால் அருகே தனது கையில் காந்தி மற்றும் அம்பேத்கர் புகைப்படத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷமிட்ட அவரை போலீஸார் இழுத்துச் சென்றனர். அவர் அரசுக்கு எதிராக பதாகைகளை வைத்திருந்ததற்காகவும், செய்தியாளர்களிடம் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.