Skip to main content

இராஜபாளையம் டூ டெல்லி; மத்திய அரசு வழக்கறிஞராக ராம் சங்கர் ராஜா நியமனம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

  Ram Shankar Raja appointed as central government prosecutor!

 

இராஜபாளையத்திலிருந்து டெல்லி சென்று குறிப்பிட்ட சில ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராம் சங்கர் ராஜா மத்திய அரசின் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சட்டம், நீதித்துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம் சங்கர் ராஜா, உச்சநீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் சிறப்பு வழக்கறிஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சிறப்பு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். பல்வேறு மத்திய மாநில அரசின் மூத்த வழக்கறிஞர்களுடனும், அட்வகேட் ஜெனரல் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகிய அரசு வழக்கறிஞர்கள் உடனும் பல்வேறு வழக்குகளில் பணியாற்றியுள்ளார். 

 

குற்றவியல் துறையில் முதுநிலை பட்டமும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் "கொலிஜியம்" என சொல்லப்படும் அமைப்பு குறித்த ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றவர். இங்கிலாந்து பாராளுமன்றம், அமெரிக்க அட்டானிக் ஜெனரல் கமிட்டி, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் இந்திய சட்டங்கள் குறித்து உரையாற்றியுள்ளார். உலகளாவிய சட்டங்கள் குறித்த படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் யுனிவர்சிட்டியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து இந்திய ஜனாதிபதி மாளிகையில் பயிற்சி கொடுத்துள்ளார்.

 

தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டின் பிரதமரை இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அரசு பயணமாக அழைத்து தனது சொந்த முயற்சியில் அழைத்து வந்து அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபால் கவுடா, கொரியன் ஜோசப், நாகேஸ்வர ராவ் ஆகிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் 2015ம் ஆண்டு சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கை முதன்முதலில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடத்தினார். வேறு நாட்டின் பிரதமர் உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வருகை தரும் முதல் நிகழ்வு என அனைவராலும் அப்போது பேசப்பட்டது. 

 

டெல்லியில் உள்ள அமிட்டி சட்ட பல்கலைக்கழகம், குரு கிராமில் உள்ள கோயங்கா பல்கலைக்கழகம், ராஜஸ்தானில் உள்ள மோடி பல்கலைக்கழகம், கிரேட்டர் நோய்டாவில் உள்ள லாயிட் சட்டக் கல்லூரி போன்ற இந்தியாவில் உள்ள பல்வேறு சட்ட கல்லூரிகளில் "மூட் கோர்ட்" எனப்படும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் டெல்லி முதன்மை அமர்வில் அரசின் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறப்பு வழக்கறிஞராக முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை பாதுகாப்பு வழக்கு மற்றும் ரயில் தண்டவாளங்களில் யானைகளின் இறப்பை தடுப்பது குறித்த வழக்கில் நீதிமன்றத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நல்ல "ரிப்போர்ட்டபிள் ஜட்ஜ்மெண்ட்"  எனப்படும் சொல்லப்பட கூடிய தீர்ப்புகளை பெற்றுள்ளார். மேலும் கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற பொது நல வழக்கை தாக்கல் செய்து அதில் வெற்றி பெற்று நீதிபதிகளின் பாராட்டை பெற்றுள்ளார். 

 

மனித உரிமைகள் குறித்த படிப்புகளில் ஆர்வம் கொண்டு அதிலும் முதுநிலை பட்டம் பெற்று சமீபத்தில் மனித உரிமைகள் குறித்த கருத்து அரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார். சமீபத்தில் தென்னக ரயில்வே பயனாளிகள் சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவைத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரியில் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்த தனது மேற்படிப்பில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரையை பாராளுமன்ற கல்லூரியில் சமர்ப்பித்து சிறப்பு பட்டம் பெற்றுள்ளார். அரசியல் அமைப்பு மற்றும் பாராளுமன்ற படிப்புகள் குறித்த கல்லூரியின் ஆயுட்கால உறுப்பினராக கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்