அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மதகுரு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமிபூஜை வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பூஜைகளில் ஈடுபட்டு வந்த பிரதீப் தாஸ் என்ற மதகுரு ஒருவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. ராமர் கோயிலில் தினசரி பூஜைகளை செய்யும் நான்கு முக்கிய மதகுருக்களில் இவரும் ஒருவர் ஆவார். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுதவிர அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 16 காவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.