மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று (26.01.2021) ட்ராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.
இதனிடையே டெல்லி செங்கோட்டையில் சிலர், சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றினர். இதற்கு கடும் கண்டங்கள் எழுந்தன. இந்த நிலையில் பஞ்சாபி நடிகர் தீப் சித்து, விவசாயிகளை செங்கோட்டையை நோக்கி வழிநடத்தியதாகவும், செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டதற்கு அவரே காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
செங்கோட்டையில் கொடியேற்றியதை தீப் சித்துவும் தனது ஃபேஸ்புக் லைவ்வில் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர், “எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையில் நிஷன் சாஹிப்பை (சீக்கியர்களின் புனிதக் கொடி) ஏற்றினோம்” எனக் கூறினார். இதன்பிறகு டெல்லியில் கலவரத்தைத் தூண்டியதாக, தீப் சித்து மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும் தீப் சித்துவை கைது செய்ய துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தீப் சித்து, டெல்லி போலீஸாரின் சிறப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி கலவரத்தில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகியோர் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தகை அறிவித்துள்ளது டெல்லி காவல்துறை. இவர்களும் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.