ராஜஸ்தான் மாநிலத்தின் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் அசோக் கெலாட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் வாசித்துக் கொண்டிருப்பது பழைய நிதிநிலை அறிக்கை என்பதைக் கண்டுபிடித்த சில அமைச்சர்கள், நீங்கள் படித்துக் கொண்டிருப்பது பழைய நிதிநிலை அறிக்கை என்று கூறி உள்ளனர். உடனே திடுக்கிட்ட முதல்வர் பட்ஜெட் உரையை நிறுத்திவிட்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து பாஜகவினர், அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் சட்டமன்றத்தில் பாஜக தலைவர் குலாப் சந்த் கடாரியா, "இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கசிந்து விட்டது" எனக் கூறினார். பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அவை கூடியதும் இதுகுறித்து முதல்வர் பேசுகையில், "என் கையில் உள்ள பட்ஜெட் உரைக்கும் உங்கள் கைகளில் உள்ள பட்ஜெட் உரைக்கும் வேறுபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அதை தவிர்த்து விட்டு பட்ஜெட் கசிந்து விட்டது என்று உங்களால் எப்படி சொல்ல முடியும். என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் தவறுதலாக பழைய பட்ஜெட் உரையின் சில பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது. இது மனிதனின் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுதான். இருப்பினும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இச்சம்பவம் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.