கோவா மாநிலத்தில், அடுத்த மாதம் 14 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெல்வதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்தாண்டு இறுதியிலிருந்து செய்து வந்தன. அதேபோல் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கோவா மாநிலத்தை குறி வைத்து காய்களை நகர்த்த தொடங்கியது.
அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக இருந்த அலெக்ஸோ ரெஜினால்டோ லூரென்கோ எம்.எல்.ஏ-வை திரிணாமூல் காங்கிரஸ் கடந்த மாதம் தங்கள் கட்சியில் சேர்த்தது. இந்தநிலையில் தற்போது அலெக்ஸோ ரெஜினால்டோ லூரென்கோ திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அலெக்ஸோ ரெஜினால்டோ லூரென்கோ, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கர்டோரிம் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் அவர் கட்சியை விட்டு விலகினார் என்பதும், அவர் கட்சியிலிருந்து விலகிய பின்னரும் கர்டோரிம் தொகுதிக்கு காங்கிரஸ் மாற்று வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.