
சென்னை கலைவாணர் அரங்கில் பி.டி.ராஜன் 'வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிலையில் அவர் மேடையில் உரையாற்றினார். அவரின் உரையில், 'திமுகவின் ஆட்சி என்பது நீதிக் கட்சியின் தொடர்ச்சியான ஆட்சி தான். பி.டி.ராஜன் அவர்களுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசல்ல நானும் வாரிசு தான். திராவிட வாரிசுகள். இங்கு இருப்பவர்கள் எல்லாம் திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு பற்றிக் கொண்டு எரிகிறது. அவர்களுக்கு எரியட்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இன்று எப்படி, திராவிடத்தை ஒழித்து விடுவோம் என சில கைக்கூலிகள் பேசிக்கொண்டிருக்கிறார்களே அதேபோல பி.டி.ராஜன் காலத்திலேயே நீதிக்கட்சியை குழிதோண்டி பாதாளத்தில் புதைத்து விடுவோம் என ஒரு தலைவர் சொன்னார். பி.டி.ராஜன், அவரை தொடர்ந்து பண்பாளர் பழனிவேல்ராஜன் வந்தார். இப்போது பழனிவேல் தியாகராஜன் நம்முடன் இருக்கிறார். பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கும் அறிவார்ந்த, வலிமையான வாதங்களை வைக்கக் கூடியவர்.
நான் அவருக்கு கூற விரும்புவது இந்த சொல்லாற்றல் அவருடைய பலமாக தான் இருக்குமே தவிர பலவீனமாக ஆகிவிடாது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயை மெல்லும் வினோத ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுடைய அவதூறுகளுக்கு உங்களுடைய சொல் ஆதரவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக கழக தலைவராக மட்டுமல்ல உங்கள் மேல் இருக்கும் அக்கறையுடன் அறிவுரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.