
விருதுநகரில் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''தமிழகத்தில் முதலமைச்சர் கண்ட்ரோலில் எந்த அமைச்சரும் கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எந்த அமைச்சரும் கிடையாது. திமுக கட்சியே அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. தான்தோன்றித்தனமாக சட்டமன்றத்தில் மட்டும் யாரும் பதில் சொல்லவில்லை, அமைஞ்சர்களுக்குள்ளேயே ஈகோ இருக்கிறது.
திமுக கட்சிக்குள்ளேயே ஈகோ இருக்கிறது. அதனால் தான் பெண்களை எல்லாம் கேவலமாக பேசுகிறார்கள். இதை தடுக்கும் இடத்தில் இருக்கக்கூடிய கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பொன்முடியை கைது செய்திருக்க வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி இருக்க வேண்டும். அதற்காகத்தான் விருதுநகர் மாவட்ட அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிவிட்டது; இனி நீட் முடிந்த கதை; நீட் படித்து பாஸ் ஆகுங்கள் என்று சொன்னவரே நளினி சிதம்பரம் தான். முழுக்க செய்தது காங்கிரஸ், திமுக.
எடப்பாடி பழனிசாமி சொன்னதை போல நீங்கள் 1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து ஆண்டுகள் மந்திரியாக இருந்தீர்கள். ஒரு வருடம் முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம் சலுகைகளை அனுபவித்த போது பாஜக கூட்டணி இனித்தது. இன்று அதிமுக-பாஜக கூட்டணி வைத்தவுடன் மக்கள் மத்தியில் ஒரு பிரளயம் ஏற்படுகிறது என தெரிந்தவுடன் பதறுகிறார்கள். எதற்கு நீங்கள் பதறுகிறீர்கள்? ஏன் பதறுகிறீர்கள்? எங்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. அதைக் கேட்கக் கூடிய தகுதி உங்களுக்கு என்ன இருக்கிறது?'' என ஆவேசமாகப் பேசினார்.