4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் நேற்று (20-10-23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீச முடிவு செய்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தனர். டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 163 ரன்களை வாரிக் குவித்தார். அதேபோல், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 121 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய வீரர்களான மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்னஸ் என அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 367 ரன்களை எடுத்திருந்தது. பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரெளஃப் 3 விக்கெட்டுகளையும், உஸ்மா மிர் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் பார்ட்னர்சிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை விளையாடினர். அதன் படி, அப்துல்லா ஷஃபிக் 61 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 64 ரன்கள் குவித்தார். அதே போல், இமாம் உல் ஹக் 71 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடித்து 70 ரன்களை குவித்தார். அதன் பின்பு, பாகிஸ்தான் அணி 134 ரன்கள் இருந்த போது களத்தில் அப்துல்லா ஷஃபிக் 21.1 ஓவரில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்து 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து விளையாடிய ஷகில், இஃப்திகார், உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி மற்றும் அஃப்ரிடி சொற்பமான ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், 43.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 305 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சில், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பா, 53 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய இருவரும் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.