
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி வழங்கியது.
ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கும் அறிவுரை வழங்கியது. ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்று தந்ததற்கு, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதே சமயம், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகனையாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஐ மாறியுள்ளது. உச்சநீதிமன்றம் சூப்பர் நீதிமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது” எனப் பேசினார். இவருடைய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜக்தீப் தன்கரின் விமர்சனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது என குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜக்தீப் தன்கர் பேசியதாவது, “நாடாளுமன்றமே உயர்ந்தது. அங்கு இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான உச்சபட்ச எஜமானர்கள். அவர்களுக்கு மேல் எந்த அதிகாரமும் இருக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை ஒருபோதும் நிறுத்தி வைக்க முடியாது” என்று கூறினார்.