அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி தலைமையில், எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸுக்கு புறப்பட்டனர்.
ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு சென்றது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் சென்ற நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். "தனது மகளை கடைசியாக ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கூட குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இதற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்'' என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.