தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று முன்தினம் (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு மூன்றாவது நாளாக இன்றும் (01.08.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இவர்கள் இருவரும் மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கும் ராகுல் காந்தி சென்றார். அங்கு நிலச்சரிவில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல்களைத் தெரிவித்தார்.